உலகமெங்கும் ஒமிக்ரான் கரோனா பரவி வரும் நிலையில், உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் நேற்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், லண்டனில் 44 சதவீத கரோனா பாதிப்புக்கு ஒமிக்ரான் வகை கரோனா காரணமாக இருப்பதாகவும், அடுத்த 48 மணிநேரத்தில் ஒமிக்ரான் லண்டன் நகரில் அதிகம் பரவும் கரோனா வகையாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டனில் 4,713 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.