
இரண்டு இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து வலுக்கட்டாயமாக சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், பூரி மாவட்டம் கோடகோசங்கா கிராமம். இந்தகிராமத்திற்கும் அருகில் உள்ள பிரதான்சஹி கிராமத்திற்கும் இடையே அடிக்கடி சில மோதல் இருந்துள்ளது. இதில் பிரதான்சஹி கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், கோடகோசங்கா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை மரத்தில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், ஒரு இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு சிகரெட்டால் சூடு வைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தங்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.