ஒரு வாரமாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தொடர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பாரிஸில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் புதினின் மெழுகுசிலை அகற்றப்பட்டுள்ளது. பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஜீன் ஆற்றங்கரை ஓரம் 'க்ரேவின்' என்ற அருங்காட்சியகம் 1782 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் பழமையான அருங்காட்சியகமாகும். இங்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் சிலையை காட்சிப்படுத்த தாங்கள் விரும்பவில்லை என 'க்ரேவின்' அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதினின் தத்ரூப மெழுகுசிலை தலைவேறு உடல் வேறாக பிரிக்கப்பட்டு அகற்றப்படும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இது என்ன புதினின் தலைக்கு வந்த சோதனை' என சமூகவலைத்தளங்கள் வாயிலாக சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.