உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்காவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக மீட்டு வருகின்றனர் வெளிநாட்டு தூதரகங்கள். இந்திய மாணவர்களையும் இந்திய அரசு போலாந்த் மற்றும் ருமேனியா போன்ற எல்லைகள் மூலம் மீட்கப்பட்டுவருகின்றனர்.
அதேசமயம், அந்த எல்லைகளில் மாணவர்கள் சந்தித்துவரும் துன்பங்களையும் பல்வேறு காணொளிகளில் கண்டுவருகிறோம். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், மாணவர்கள் சிலர், “ஒரு தலைவர் மனிதநேயத்தை தாண்டி அதிகாரத்தை தேர்ந்தெடுத்ததனால், குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற தாய்மார்கள், மூத்த குடிமக்கள் என இத்தனை மக்கள் எதிர்கொள்ளும் விளைவுகளை நீங்கள் பார்க்கிறீர்கள்.
எங்களுக்கு வீடுகள் இல்லை. மெட்ரோவின் சுரங்கப்பாதைகளை அடைக்களமாக கொண்டிருக்கிறோம். -2 டிகிரி அளவில் வெளியே பனி பொழிவு இருக்கிறது. மக்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஹீட்டர், போர்வை, உணவு, தண்ணீர் எதுவும் இல்லை. இந்திய தூதுரகம் எங்களை மீட்கும் திட்டங்களை வகுப்பதிலும், அதற்கான வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது. மேற்கு எல்லையில் இருப்பவர்களை இந்திய தூதுரகம் மீட்டுவருகிறது.
கீவ், கார்வி, சுமி போன்று கிழக்குகளில் உள்ள மாணவர்கள் போலாந்த், ஹங்கேரி உள்ளிட்ட எல்லைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். அவர்களுக்கான பேருந்து, ரயில் வசதிகள் இல்லை. ஏறக்குறைய 16 மணி நேரங்கள் எடுத்துகொள்ளும் அவ்விடங்களுக்கு செல்ல பேருந்துகளும், ரயிலும் இல்லாமல் தவித்துவருகிறோம்.
ரஷ்ய அதிபர் புதினிடம் இறுதியாக ஒரு கோரிக்கை வைக்கிறோம்; போரை நிறுத்தங்கள். மனிதநேயத்தைவிட வேறும் எதுவும் பெரிது அல்ல. வலிமை என்பது மனிதநேயமும், இரக்கமுமே.. போரை நிறுத்தங்கள்.” என்று பேசியுள்ளனர்.