ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள நெஸ் ஏரியில் ராட்சத ஈல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் கடலின் முகத்துவாரத்தில் உள்ள நெஸ் ஏரியில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத உயிரினமான பிளேசியோசர் போன்ற ராட்சத உயிரினம் ஒன்று வாழ்வதாக அப்பகுதி மக்களிடையே நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது. இந்த ராட்சத மிருகத்தை நேரில் பார்த்ததாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர். இதனையயடுத்து நியூஸிலாந்து நாட்டின் ஒடாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த ஏரியில் இருந்து 250 நீர் மாதிரிகளை எடுத்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்த நீர் மாதிரிகளில் காணப்பட்ட 500 மில்லியன் டி.என்.ஏ தொடர்களை ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி மக்கள் மத்தியில் பேசப்படுவது போன்று டைனோசர் கால ராட்சத மிருகங்கள் எதுவும் அந்த ஏரியில் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை எனவும், ஆனால் மிகப்பெரிய ஈல் வகை மீன் அதில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக 3 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது ஈல். ஆனால் இந்த ஏரியில் அதனை விட பெரிய ராட்சத ஈல் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.