கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ வழங்கிய முதலை ஒன்று முதியவரின் கையை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1972 ஆம் வருடம் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் ஷடலோவுக்கு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஹிலாரி, காஸ்ட்ரோ என்ற பெயரில் இரண்டு முதலைகளை பரிசாக அளித்தார்.அதன்பிறகு இவ்விரு முதலைகளும் மாஸ்கோ விலங்கியல் பூங்காவில் முறையாக பராமரிக்கபட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இங்கு வளர்ந்த முதலைகள் இரண்டும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்கான்சென் ஆக்வரியம் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மக்களும் அதை பார்த்து போட்டோ எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இங்கு வன விலங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் பங்கேற்க வந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர், அந்த முதலைகள் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் நின்று உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளில் இருந்து வெளியே தலை நீட்டிய ஒரு முதலை அவரது கையின் பின்புறத்தை கடித்தது. இந்த விபத்தில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் தெரிவிக்கின்றன.