Skip to main content

சரியான நேரத்தில் பூக்காத பூக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு தண்டனை அளித்த வடகொரியா!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

kim jong un

 

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் அதிரடி நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் பூக்கள் சரியான நேரத்தில் பூக்காததற்காகத் தோட்ட ஊழியர்களை வடகொரிய தொழிலாளர் முகாமில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

 

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் பிறந்தநாள், நேற்று கொண்டாடப்பட்டது. வருடந்தோறும்  கிம் ஜாங் இல்லின் பிறந்த தினத்தின்போது, அவரது பிறந்தநாளுக்காக 1988 ஆம் ஆண்டு ஜப்பானியத் தாவரவியலாளர் கமோ மோட்டோடெரு உருவாக்கிய 'கிம்ஜோங்கிலியா' மலரைக் கொண்டு நாட்டின் வீதிகள் அலங்கரிக்கப்படும்.

 

வடகொரியாவில் அழிவற்ற மலர் என அழைக்கப்படும் 'கிம்ஜோங்கிலியா' மலர், பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்டு வருகிறது. பசுமைக்குடிலில் இந்த மலரை வளர்க்கச் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும். இந்தச்சூழலில் கிம் ஜாங் இல்லின் பிறந்த தினத்தின்போது மலர்கள் மலராததற்காக பசுமைக்குடிலின் தோட்டக்காரர்கள் சிலரை வடகொரியா, தொழிலாளர் முகாமில் அடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விறகுகள் பற்றாக்குறையே பசுமைக்குடிலில் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது . கடந்தாண்டு இறுதியில் கிம் ஜாங் இல்லின் நினைவுநாளையொட்டி, 10 நாட்களுக்குச் சிரிப்பது, மதுபானம் அருந்துவது, மளிகைப் பொருட்களை வாங்குவது, ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பிறந்தநாள் கொண்டாடுவது, இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது ஆகியவற்றுக்கு வடகொரியா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்