ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
அதேபோல் ஆப்கானிஸ்தான் மக்களும் தலிபான்களுக்கு பயந்து, தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேபோல் ஆப்கான் பெண்களின் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜபிஹுல்லா முஜாஹித், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின் லேடனுக்கு தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "20 வருட போருக்குப் பிறகும், இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்குத் தொடர்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இந்தப் போருக்கு (ஆப்கன் மீதான அமெரிக்க படையெடுப்பு) எந்த காரணமும் இல்லை. எனவே ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்ததை அமெரிக்கர்கள் போருக்கான காரணமாக பயன்படுத்திக்கொண்டனர்" என கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறாது என என தலிபான்களில் உறுதியளிக்க முடியுமா என்ற கேள்விக்கு, "ஆப்கானிஸ்தான் மண் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம்" என ஜபிஹுல்லா முஜாஹித் என கூறியுள்ளார்.
அதேபோல் அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜபிஹுல்லா முஜாஹித், "எங்கள் நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. கடந்த காலத்தில் அவர்கள் என்ன செய்திருந்தாலும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளோம். எங்கள் நாட்டு மக்கள் எங்களுக்கு தேவை. இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் தேசத்திற்கு தேவை. ஆனால் அவர்கள் வெளியேற விரும்பினால் அது அவர்களின் விருப்பம். நாங்கள் பெண்களை மதிக்கிறோம், அவர்கள் எங்கள் சகோதரிகள். அவர்கள் பயப்படக்கூடாது. தலிபான்கள் நாட்டுக்காக போராடினார்கள். பெண்கள் எங்களைப் பற்றி பெருமைப்பட வேண்டுமே தவிர பயப்படக்கூடாது" என தெரிவித்துள்ளார்.