இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் 6 தேதி பதவியேற்ற நிலையில் பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் பிரதமராக முறைப்படி அறிவித்தார். பதவியேற்ற பின் வரிக்குறைப்பு உள்ளிட்ட சில பொருளாதார திட்டங்களை உள்ளடக்கிய மினி பட்ஜெட்டை பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் அறிவித்தார். ஆனால் அவரால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் நாட்டில் கடுமையான பொருளாதார பாதிப்பை உண்டாக்கி சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் டாலருக்கு நிகரான இங்கிலாந்து பவுண்ட் மதிப்பு வெகுவாக சரிந்தது. இதனை அடுத்து அவரது கட்சி எம்.பிக்களே லிஸ் ட்ரஸ் பதவி விலக வேண்டும் என எதிர்ப்புக்குரல் கிளப்பினர்.இதனைத் தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி விலகினர்.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரையும் இங்கிலாந்து பிரதமர் பதவியையும் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் ராஜினாமா செய்வதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். மக்கள் கொடுத்த பொறுப்பை தன்னால் நிறைவேற்ற இயலவில்லை என்பதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து மன்னர் சார்லஸிற்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை பிரதமராக தொடர்வேன் என்றும் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.