சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியென் லூங், நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் , ஜவஹர்லால் நேரு நெருப்பாற்றில் நீந்தி கடந்து மக்களின் தலைவரானவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் விவாதத்தின்போது ஜவஹர்லால் நேருவை பற்றி கூறியது: பெரும்பாலான நாடுகள் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் உன்னத மதிப்புகளின் மேல் நிறுவப்பட்டு செயல்பட தொடங்குகின்றன. ஆனால் பெரும்பாலும், நாட்டை நிறுவிய தலைவர்கள் மற்றும் முன்னோடி தலைமுறைக்கு பிறகு, படிப்படியாக விஷயங்கள் மாறுகின்றன.
தீவிரமான உணர்ச்சியுடன் விஷயங்கள் தொடங்குகின்றன. சுதந்திரத்தை போராடி வென்றவர்கள், மிகுந்த தைரியத்தையும், மகத்தான கலாச்சாரத்தையும், சிறந்த திறனையும் கொண்ட தனிமனிதர்கள். அவர்கள் நெருப்பாற்றை கடந்து வந்து மக்களின், நாடுகளின் தலைவரானார்கள். அவர்கள் டேவிட் பென்-குரியன், ஜவஹர்லால் நேரு ஆகியோர் அத்தகைய தலைவர்கள். நம்மிடமும் அவ்வாறான தலைவர் (லீ குவான் யூ) இருக்கிறார். மகத்தான தனிப்பட்ட கௌரவத்தால் ஊந்தப்பட்டு, அவர்கள் ஒரு துணிச்சலான புதிய உலகத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டிற்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் அதீத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயல்கின்றனர். ஆனால் அந்த ஆரம்பகால உத்வேகத்தைத் தாண்டி, அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் இந்த வேகத்தையும் உந்துதலையும் தக்கவைத்துக்கொள்வது கடினமாகவுள்ளது.
இன்றுள்ள பல அரசியல் அமைப்புகள், அவற்றின் நிறுவன தலைவர்களால் அடையாளம் காண முடியாததாக மாறிவிட்டது. பென்-குரியனின் இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளில் நான்கு பொதுத் தேர்தல்கள் நடந்த போதிலும், ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். சிலர் சிறைக்கு சென்றுள்ளனர்.
ஊடக செய்திகளின்படி நேருவின் இந்தியாவில், பல குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கூறப்பட்டாலும் கூட, மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.