ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்ய அதிபர் புதினும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது புதினும், மேக்ரோனும் 6 மீட்டர் (அடி) இடைவெளியில் அமர்ந்திருந்தனர்.
இது சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான யூகங்களை கிளப்பியது. புதின், ஒரு அரசியல் ரீதியிலான செய்தியை மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறார் என கூறப்பட்டது. இந்தநிலையில், புதினும், மேக்ரோனும் நீண்ட இடைவெளிவிட்டு அமர காரணம், மேக்ரோன் கரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுத்ததே காரணம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதினை பாதுகாக்கும் பொருட்டு, மேக்ரோனை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு ரஷ்யா கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தன்னுடைய டி.என்.ஏவை ரஷ்யா திருடிவிடலாம் என்ற பயத்தால் மேக்ரோன், கரோனா பரிசோதனையை செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே புதினுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவே இருவரும் 6 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.