சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில் சுற்றுலா பயணி ஒருவர் கரடிக்கு தனது ஐபோனை சாப்பிட கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் வனவிலங்குகள் பூங்காவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கரடிகளைப் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது இரண்டு கரடிகளும் அவரை ஆர்வமாகப் பார்க்க, கையில் இருந்த ஆப்பிள் பழத்தை கரடிகளும் தர நினைத்த அவர், அதனை தூக்கி வீச நினைத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக மறந்து போய் தனது மற்றொரு கையில் இருந்த ஆப்பிள் ஐபோனைத் தூக்கி வீசிவிட்டார். இதனை பார்த்த அந்த கரடி, அதை வாயில் கவ்விக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு சென்று விட்டது. அதன்பின் பூங்கா ஊழியர்கள் அந்த போனை மீட்டு சுற்றுலா பயணியிடம் கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.