கரோனா தொற்று பரவல் தொடங்கிய நேரத்தில் உலகம் முழுவதுமுள்ள மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரியச் செய்தனர். இப்போது, பல நிறுவனங்களின் ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், கூகுள் நிறுவனம், அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், இதனைக் கூறியுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பணியாளர்கள், அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே நிறுவனத்திற்கு நேரடியாக வந்து பணியாற்றலாம் என்றும், மீதமுள்ள நாட்களில் வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய ஒரு செயல்முறையைப் பரிசோதித்து வருவதாகவும், அதன் மூலம் செயல்திறன் போன்றவற்றை அதிகரிக்கலாம் எனவும் சுந்தர் பிச்சை அந்த மெயிலில் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.