இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்ததாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியானதாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இஸ்ரேல் படையினர் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 45 பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் பரவலாக பேசப்பட, பலரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஆல் ஐஸ் ஆன் ரபா’ ‘ALL EYES ON RAFAH' என்ற போஸ்டரை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவில் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாலத்தீவு உள்துறை அமைச்சர் அலி இஹூசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “அதிபர் மொஹமட் முய்ஸு, அமைச்சரவையின் பரிந்துரையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாஸ்போர்ட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடிமக்கள் நுழைவதைத் தடுக்க இந்நாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை முற்றிலும் மீறுவதாகும்” என்று கூறினார்.
மாலத்தீவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களுக்கு இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூறுகையில், ‘மாலத்தீவுகள் இனி இஸ்ரேலியர்களை வரவேற்கவில்லை என்பதால், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்கும் மற்றும் மிகுந்த விருந்தோம்பல் உபசரிக்கும் சில அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகள் இங்கே உள்ளன’ என்று அறிவித்துள்ளது.