கரோனா வைரஸை சீன அரசு கட்டுப்படுத்திய விதத்திற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டாலும், ஜனவரிக்குப் பிறகே இதன் பரவல் உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் சீனாவை விட இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் சீனாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத சீனா, தங்கள் நாடு கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்தது. இந்தச் சூழலில் கரோனா வைரஸை சீன அரசு கட்டுப்படுத்திய விதத்திற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொரிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள் செய்தியில் கிம் சீனாவைப் பாராட்டியதாகவும், அதேபோல சீன அதிபர் ஜி ஜின்பிங், கிம்மின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.