ரஷ்ய ராணுவ வீரர்களின் முன்னெடுப்பைத் தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் போர்க்களத்தில் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்தார்.
ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனில் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்யப் படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தாக்குதலைத் தீவிரப்படுத்த ரஷ்ய ராணுவம் உத்தரவிட்டிருப்பது, உக்ரைன் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, உக்ரைனின் தெற்கு மாகாணமான கெர்சானில் ரஷ்ய ராணுவ வாகனங்கள் படையெடுத்துச் சென்றனர். அவர்களை தடுக்க எண்ணிய உக்ரைன் ராணுவ வீரர், தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து உயிர் நீத்தார். இதனால் ரஷ்ய வீரர்கள் முன்னோக்கிச் செல்லத் திட்டமிட்டியிருந்த பாலம் முற்றிலும் சேதமடைந்தது. உக்ரைன் ராணுவ வீரரின் இந்த உயிர் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.