உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டநிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ரஷ்ய ராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளன.
இந்தசூழலில் உலகின் பல்வேறு நாடுகள் போரை நிறுத்துமாறு பல்வேறு உலக நாடுகள், ரஷ்ய அதிபர் புதினை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தாலிபன்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு, “உக்ரைன் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பொதுமக்கள் உயிரிழப்பதற்கான சாத்தியம் கவலை அளிக்கிறது. அனைத்து தரப்புகளும் வன்முறையை தீவிரமாக்கும் நிலையை எடுப்பதை தடுக்க வேண்டும். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என இருதரப்பையும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே செர்னோபில் பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு கதிர்வீச்சு அளவு அதிகரித்திருப்பதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு செர்னோபில் பகுதியில் உலகின் மோசமான அணு விபத்து நடைபெற்றது. அங்கு அமைந்திருந்த அணு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஏற்பட்ட கதிர்வீச்சு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து அந்த விபத்து நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள 35 கிலோமீட்டர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதி, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ தகுதியற்றதாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுவது இங்கு கவனிக்கத்தக்கது.
இதனிடையே ரஷ்யா, தங்கள் நாட்டில் தரையிறங்க பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்டின் விமானங்கள் பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டதுக்கு பதிலடியாக ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.