அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸை துர்கா தேவியாக உருவகப்படுத்தி வெளியிடப்பட்ட புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமலா ஹாரிஸின் சகோதரியின் மகள் மீனா ஹாரிஸ், தனது நவராத்திரி வாழ்த்தில், கடவுள் துர்கா தேவியுடன் கமலா ஹாரிஸை சித்தரித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் கமலா ஹாரிஸ் துர்கா தேவியாகவும் ஜோ பிடென் சிங்கமாகவும் அரக்கனாக ட்ரம்ப்பும் சித்தரிக்கப்பட்டிருந்தனர். இந்த புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீனா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து இந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.