உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அதேநேரத்தில் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களைத் தங்கள் நாடுகளுக்குள் அனுமதிப்பது குறித்து ஆலோசித்துவருகின்றன. அதேபோல் உலகநாடுகள், தடுப்பூசி செலுத்திக்கொண்ட தங்கள் நாட்டைச் சேர்ந்த மக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் வகையில், அவர்களுக்குத் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவது குறித்து ஆலோசித்துவருகின்றன.
இந்தநிலையில் ஜப்பான், வெளிநாடு செல்லும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி சான்றிதழ் (தடுப்பூசி பாஸ்போர்ட்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், இந்தச் சான்றிதழ் காகித வடிவில் இருக்குமெனவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டலில் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகளைச் செய்துவருகிறது. அமெரிக்காவும் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக ஆலோசித்துவருவதாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.