மிச்சிகன் மற்றும் ஜார்ஜியா நீதிமன்றங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்காக உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளதால் நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தார். அதன்படி தேர்தல் வெற்றிக்கு மிகமுக்கியமான மற்றும் இழுபறியில் இருக்கக்கூடிய மாகாணங்களான மிச்சிகன், ஜார்ஜியா, பென்சில்வேனியா, நெவேடா ஆகிய மாகாண நீதிமன்றங்களில் ட்ரம்ப் சார்பாக, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இதில் மிச்சிகன் மற்றும் ஜார்ஜியா நீதிமன்றங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது ட்ரம்ப்பின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக ட்ரம்ப் அளித்த செய்தியாளர் சந்திப்பை அமெரிக்க ஊடகங்கள் பாதியில் ஒளிபரப்புவதை நிறுத்தியதுடன், ட்ரம்ப் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.