நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் 53 -ஆவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசு, 2020 செப்டம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது நடைபெற்ற தேர்தலிலும் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்த வாக்குகளின் சுமார் 50 சதவீத வாக்குகளைப் பெற்று, 1930 -ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்நாட்டுத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கட்சி என்ற சாதனையைத் தொழிலாளர் கட்சி இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசு அமைச்சரவையை அமைத்துள்ளது. முதற்கட்டமாக ஐந்து அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. இந்தப் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே நியூசிலாந்து நாட்டில் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் ஆவார். 41 வயதான பிரியங்கா 'சமூக மற்றும் தன்னார்வத் துறை' அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கேரளாவில் பிறந்த இவர், சென்னையிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்து பின்னர் மேற்படிப்பிற்காக நியூசிலாந்து சென்றார். அதன்பின்னர் அங்கே பணியாற்றிய இவர், தன்னை தொழிலாளர் கட்சியில் இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்தார். கேரளாவின் கொச்சியைப் பூர்விகமாகக் கொண்ட இவர் ஆக்லாந்து தொகுதியிலிருந்து தற்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.