இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டு ஒன்று செயலிழக்க வைக்கும் போது வெடித்துச் சிதறிய சம்பவம் போலந்து நாட்டில் நடந்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகள் பல்வேறு நாடுகளில் கண்டறியப்படுவது வாடிக்கை. அந்தவகையில், போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 5,000 கிலோவுக்கு மேல் கொண்ட இந்த வெடிகுண்டு 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்தால் வீசப்பட்டது எனக் கண்டறியப்பட்டது.
இந்த வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அது திடீரென நீருக்கடியில் வெடித்துச் சிதறியது. இதனால், கால்வாயின் மேல் பல மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் அலை போல எழுந்தது. இருப்பினும், தண்ணீருக்கு அடியில் வெடித்த இந்த குண்டு காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலந்து தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட மிகப்பெரிய குண்டுகளில் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.