Skip to main content

“ஹமாஸ் பயங்கரவாதத்தை அழிக்க எதையும் செய்வோம்” - இஸ்ரேல் பிரதமர்

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Israeli Prime Minister says We will do anything to destroy Hamas

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 10 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 

 

இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவை நேரில் சந்தித்துப் பேசி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா பிரதமர் ஜோ பைடன் உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்கள் இஸ்ரேலுக்குச் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இன்று சந்தித்துப் பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “ஹாலோகாஸ்ட்-ஐ தொடர்ந்து யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூர தாக்குதல் இது. ஹமாஸ், குழந்தைகளைக் கொன்று, அவர்களின் தலைகளைத் துண்டாக்கிவிட்டனர். பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களிலும் ஈடுபட்டனர். காசாவில் உள்ள ஹமாஸை அழிப்பதற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் மேற்கொள்வோம். ஹமாஸின் பயங்கரவாதத்தை அழித்து, அதன் அரசியல் கட்டமைப்பை உடைத்தெறிவோம். எங்களின் பிணைக் கைதிகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்