இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலைக்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ்களை செலுத்தி வருகின்றனர். இஸ்ரேல், சிலி உள்ளிட்ட நாடுகள் நான்காவது டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, கரோனாவுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி தேவைப்படலாம் என கூறியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு கூறியுள்ளதாவது: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பு தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய,தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டியிருக்கலாம்.
தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டிய தேவையைக் குறைக்கும் பொருட்டு தடுப்பூசிகள் பரந்த, வலுவான மற்றும் நீடித்த நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். தற்போதுள்ள தடுப்பூசிகளை பூஸ்டர்களாக மீண்டும் மீண்டும் செலுத்துவது நிலையானதாகவோ, இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு கூறியுள்ளது.