சிரியா நாட்டில் 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் தொடங்கியதிலிருந்தே, இஸ்ரேல் சிரியாவின் அரசுப் படைகளுக்கு எதிராகவும், அரசுப் படைகளுக்கு ஆதரவாகச் சண்டையிடும் இரான் ஆதரவு படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தங்கள் நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பகுதியிலிருந்து நேற்று இரவு இந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை எனவும் தங்கள் நாட்டு இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை மையமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், இராணுவ அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற்ற கட்டிடத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இம்மாதத்தில் சிரியாவில் நடத்தும் இரண்டாவது ஏவுகணை தாக்குதல் இதுவாகும்.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இஸ்ரேல் சிரியா மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஒரு சிரிய இராணுவ வீரர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு இஸ்ரேல் மீது விமான எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக இஸ்ரேல் இராணுவம் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.