ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 1,000வது நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. ஏற்கெனவே, ரஷ்யாவில் உள்ள ராணுவ இலக்குகளை தாக்க நீண்ட நேர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. உக்ரைனின் நிப்ரோ நகரத்தை குறிவைத்து, ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வெடிக்குண்டு, வெடித்து அருகில் இருந்த கட்டிடத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி அணுசக்தி, உயிரியல், இரசாயன பாதுகாப்புப் படைகளின் (NPC) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் படுகொலை செய்யப்பட்டார். ரஷ்யாவின் உயர் அதிகாரி வெடிக்குண்டு வெடிப்பால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 2022 இல் தொடங்கிய உக்ரைனில், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக கிரில்லோவ் நேற்று (16-12-24) உக்ரேனிய நீதிமன்றத்தால் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.