ஆடி கார் வாங்க வேண்டும் என்பதால் பணத்தை வீட்டிலேயே பிரிண்ட் போட்டு ஷோரூமிற்கு எடுத்து சென்ற 20 வயது ஜெர்மனி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியை சிறந்த 20 வயதான பெண் ஒருவர் நீண்ட காலமாக ஆடி கார் ஒன்றை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் அதற்கான பணம் இல்லாத நிலையில் வீட்டிலேயே கள்ள நோட்டு அடிப்பதென முடிவெடுத்துள்ளார். சாதாரண இன்க்ஜெட் பிரிண்டர் மூலம் 15,000 யூரோ பணத்தை பிரிண்ட் எடுத்த அவர், நேராக ஆடி கார் ஷோரூமிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஆடி A3 2013 ரக காரை தேர்வு செய்த அவர், அதனை வாங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் அதற்கான பணத்தை செலுத்த கவுண்டருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பணத்தை கொடுத்த போது அதனை மிக எளிதாக போலி நோட்டுகள் என அங்கிருந்த நபர் கண்டறிந்துள்ளார். ஆனாலும் இந்த பெண் எதோ பிராங்க் ஷோ நடத்துகிறார் என எண்ணி அவரிடம் பேசியுள்ளார்.
பின்னர் அவரிடம் தொடர்ந்து பேசிய போது, அவர் உண்மையிலேயே அந்த போலி நோட்டுகளை வைத்து கார் வாங்க வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் காவல்துறைக்கு போன் செய்துள்ளனர். பின்னர் அங்கு வந்த காவலர்கள் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.