மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா கரோனா பாதிப்பு சிகிச்சை பெற்றுவந்த சூழலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
காந்தியின் இரண்டாவது மகன் மணிலா காந்தியின் பேரனான சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்கு உதவி வந்த இவர், ஊடகத்துறையிலும் பணியாற்றி வந்தார். 66 வயதான இவர் அண்மையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சைபெற்றபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் இதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சதீஷ் துபேலியவின் சகோதரி உமா துபேலியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் சதீஷ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்" எனப் பதிவிட்டுள்ளார்.