எத்தியோப்பியாவில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் 4 இந்தியர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் நேற்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் கனடா, சீனா, அமெரிக்க, கென்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டினர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.மொத்தம் 157 பேர் பலியான இந்த விபத்தில், இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர் பலியானார்கள். இது தவிர கனடா நாட்டைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா மற்றும் ஸ்லோவோகியா நாட்டைச்சேர்ந்த 4 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.