பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தபூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான முகமது பயாஸின் சாதனை ஒட்டுமொத்த உலகத்தையுயே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
முகமது பயாஸுக்கு சிறு வயது முதல் விமான படையில் சேர வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக அவர் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பகல் முழுவதும் பாப்கார்ன் விற்கும் இவர், இரவு நேரங்களில் காவலாளியாக பணியாற்றி தனது ஐந்து சகோதர சகோதரிகளை காப்பாற்றி வந்துள்ளார்.
ஆனால் விமானப்படை குறித்த கனவு மட்டும் அவரை விட்டு அகலவே இல்லை. இந்நிலையில் அவரே சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்குவது என முடிவெடுத்தார். தொடர்ந்து இணையதளங்கள், புத்தகங்கள் மூலம் விமான கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள ஆரம்பித்தார். பின்னர் தான் சேமித்து வைத்திருந்த 50,000 ரூபாய், வங்கி கடன் 50,000 ரூபாய் என 1 லட்சம் ரூபாயில் தனது கனவு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
தனக்கு கிடைத்த விலைமலிவான பொருட்களை வைத்து பல நாட்கள் கடின உழைப்பிற்கு பிறகு தனது கனவு விமானத்தை உருவாக்கினார் இவர். கடந்த மார்ச் 23-ந் தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தின்போது, மக்கள் முன்னிலையில் இந்த விமானத்தை அவர் சோதிக்க முயன்றார். ஆனால் அதற்கு முன் போலீசார் அவரை கைது செய்து, விமானத்தை கைப்பற்றினர். மேலும் அவருக்கு ரூ.3,000 அபராதமும் விதித்தனர்.
பிறகு நல்லெண்ண அடிப்படியில் அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பின் அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னர் இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் 2 முறை முகமது பயாசின் வீட்டுக்கு சென்று, அவரது விமானத்தை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.