
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்த ட்ரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள மற்ற வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்து வேலையை செய்து வருகிறது.
அதன்படி கடந்த இரு வாரங்களாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியதாக கூறி 332 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. மூன்று ராணுவ ஹெலிக்பாடர் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டபோது அமெரிக்க ராணுவம் அவர்களை கைதிகள் போன்று கை மற்றும் கால்களின் விலங்கினை மாட்டி இந்தியாவிற்கு நாடு கடத்தியது. மேலும் இதில் சாப்பிடும் போதும் கூட கைவிலங்குகள் அகற்றப்படவில்லை என்று இந்தியர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பினர். அப்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல. 2009-ம் ஆண்டு முதல் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தும் செயல்முறையும் புதிதல்ல. அது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது ஒரு நாட்டுக்கு மட்டும் பொருந்தக்கூடிய கொள்கையும் அல்ல” என்றார். இது மேலும் பல எதிர்ப்புகளை சம்பாதித்தது.
இதனிடையே கடந்த 14 ஆம் தேதி அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி வாசிங்டென்னில் அதிபர் ட்ரம்பை சந்தித்து சட்டவிரோத குடியேற்றம், பாதுகாப்பு குறித்து எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பு நடந்த அடுத்த நாளே(15.2.2025) 117 இந்தியர்களுடன் அமெரிக்காவில் இருந்து 2வது விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பிற்கு பிறகு இந்த நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் தேதி 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியர்கள் நாடு கடத்தப்படும் போது கை கால்களுக்கு விலங்கிடப்பட்ட விடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ‘ஏலியன்கள்’ நாடு கடத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில், கை, கால்களில் விலங்குகளால் கட்டப்பட்டு நாடு கடத்தப்படும் புதிய விடியோ ஒன்றை, ‘ஏலியன்’ எனக் குறிப்பிட்டு வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த விடியோவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “ஹாஹா... வாவ்..” என்று பகிர்ந்துள்ளார். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது.