இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.
இத்தகைய சூழலில் தான் இலங்கையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் தேதியுடன் (17.11.2024) முடிவு பெறுகிறது. இதனையொட்டி அங்கு செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி (15.08.2024) முதல் தொடங்கியது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (21-09-24) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தமிழர்கள் உள்பட ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும், விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் உள்ள 3 பேரை வாக்காளர்கள் தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். அதன்படி, 50%க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாரும் 50% வாக்குகளைப் பெறாவிட்டால் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விக்ரம சிங்கே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. அந்த நாட்டில் உள்ள தமிழ் தேசியக் கூட்டணி, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், சில தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரகா பாக்கியசெல்வம் அரியநேத்திரனும் களத்தில் உள்ளார். இன்று பதிவாகும் வாக்குகளை, எண்ணும் பணி இன்றே தொடங்கி நாளை பிற்பகல் (22-09-24) முடிவுகள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. அங்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே நடைபெறும் இந்த தேர்தலை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உற்று கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.