கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றிருந்தார். அவருடைய பதவி காலத்தில், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், சூடான், ஈராக் போன்ற அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு தடை செய்யும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அதன் பின்னர், டொனால்ட் டிரம்ப் பதவிக் காலம் முடிந்த பின் ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவியேற்ற போது, டிரம்ப் விதித்த உத்தரவுகளை நீக்கிவிட்டார்.
இந்த நிலையில், அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடவுள்ளார். அதற்காக குடியரசு கட்சியின் யூதர்களுக்கான ஆதரவு மாநாடு நேற்று முன் தினம் (28-10-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேசியாதவது, “கடந்த 2017ஆம் ஆண்டில் சிரியா, ஈரான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தேன். அதனால், என்னுடைய ஆட்சியின் போது அமெரிக்காவில் எந்த வித பயங்கரவாத சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அடுத்த நடைபெறவிருக்கிற தேர்தலில் நான் அமெரிக்கா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடையை மீண்டும் விதிப்பேன். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்க விட்டிருக்கமாட்டேன். இந்த விவகாரத்தில் என்னுடைய முழு ஆதரவும் இஸ்ரேலுக்கு தான் உள்ளது. தற்போது நம் நாட்டின் எல்லைகளை திறந்துவிட்டு, அதிபர் ஜோ பைடன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்துள்ளார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லைகளை மூடுவேன். இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒழிப்பேன். மூன்றாவது உலகப் போர் உருவாகுவதை தடுப்பேன்” என்று கூறினார்.