சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், “இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள், அமெரிக்கா தயாரிப்பு பொருள்களுக்கு அதிக வரி விதிக்கின்றன.
அவர்கள் எங்களுக்கு வரி விதித்ததால், நாங்கள் அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம். ஏறக்குறைய எல்லா சந்தர்ப்பங்களிலும், அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கவில்லை. பரஸ்பரம் என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இந்தியா நம் சொந்தத்தைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. இந்தியா எங்களிடம் 100% கட்டணம் வசூலித்தால், அதற்கு நாங்களும் அதே அளவு வசூலிக்கலாம் இல்லையா? உங்களுக்கு தெரியும், அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம்.
அவர்கள் எங்களுக்கு 100%, 200% என வரி வசூலிக்கிறார்கள். இந்தியா அதிக வரி வசூலிக்கிறது. பிரேசிலும் அதிக வரி வசூலிக்கிறது. அவர்கள் எங்களிடம் வரி வசூலிக்க விரும்பினால், பரவாயில்லை. ஆனால், நாங்களும் அதே வரியை வசூலிக்கப் போகிறோம்” என்று கூறினார்.