அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேருக்குநேர் விவாதிக்கும் விவாத நிகழ்ச்சியில், ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜோ பிடென்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோர் நாடு முழுவதும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அதிபர் வேட்பாளர்களின் முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், ட்ரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகிய இருவரும் அரசியல் ரீதியிலான தாக்குதலை மீறி பலமுறை தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கரோனா விவகாரம், தொழில்துறை விவகாரம் உள்ளிட்டவற்றில் அரசியல் ரீதியிலான கருத்துகளைக் கடந்து இருவரும் பலமுறை தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த ஜோ பிடென் 'வாயை மூடுங்கள்' என்று ட்ரம்ப்பை நேரடியாக விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல், ட்ரம்ப் ரஷ்யாவை எதிர்கொள்ளத் தவறிவிட்டார், அவர் ரஷ்ய அதிபரின் செல்ல நாய்க்குட்டி போன்றவர் எனவும் பிடென் தெரிவித்தார். இதேபோல, ட்ரம்ப்பும் பலமுறை பிடெனை நேரடியாகத் தாக்கிப்பேசினார். தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இரு அதிபர் வேட்பாளர்களுக்குமான இந்த விவாத நிகழ்ச்சியில் உரையாடல் மேற்கொள்ளப்பட்ட விதம் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.