கரோனா தடுப்பு மருந்து குறித்து கமலா ஹாரிஸ் கூறிய கருத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு மாத காலத்துக்கும் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இரண்டு பிரதான கட்சிகளும் மாறிமாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டை வைத்த வண்ணம் உள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் அரசின் நிர்வாக செயல்பாடுகள் சரிவர இல்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது வர இருக்கிற தேர்தலிலும் எதிரொளிக்கும் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ட்ரம்ப் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் எதிர்கட்சிகள் அவர் மீது காட்டமாக விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தனர். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் கரோனா தடுப்பு மருந்து குறித்து ட்ரம்ப் கூறும் தகவல்களை நம்ப முடியாது என்று கூறியிருந்தார். தற்போது அதிபர் ட்ரம்ப் இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
அதில் அவர், "கரோனா தடுப்பு மருந்து குறித்து கமலா ஹாரிஸ் தவறான முறையில் பேசி வருகிறார். அதன் மூலம் இது பெரிய சாதனையில்லை என மக்களை நினைக்க வைக்க அவர் முயற்சிக்கிறார். தனி நபராக எந்த புகழாரமும் எனக்கு தேவையில்லை. மக்கள் இந்நோயில் இருந்து குணமடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறினார்.