
ரூ.4.88 கோடி வருமான ஈட்டியதாக தினசரி கூலித் தொழிலாளிக்கு வருமானத்துறை நோட்டீஸ் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜஸ்ரானா நகர் பகுதியில் வசித்து வருபவர் சப்ரா. இவரது கணவர் ஷம்சுதீன். இவர்கள் இருவரும் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி சப்ராவுக்கு தபால்காரரிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் தபால் ஒன்று வந்துள்ளது. வருமான வரித்துறை மூலம் வந்த தபாலில், சப்ரா ரூ.4.88 கோடி ஈட்டியதாக நோட்டீஸ் இருந்துள்ளது.
அந்த நோட்டீஸில், 2020-21 நிதியாண்டில் ரூ. 4,88,37,927/- வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதற்குண்டான வரியை கட்டாமல் இருந்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நோட்டீஸில் இருந்த அறிவிப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால் அதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்த சப்ரா, அந்த நோட்டீஸில் தனது கட்டைவிரல் ரேகையை பதித்துள்ளார்.
அதன் பின்னர், இந்த நோட்டீஸ் குறித்து உரிய விவரம் தெரியவரவே உடனடியாக ஒரு வழக்கறிஞரை சப்ரா அனுகியிருக்கிறார். இது குறித்து சப்ரா கூறுகையில், ‘அந்த அறிவிப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. படிப்பறிவில்லாத எனக்கு அதன் உள்ளடக்கங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வருமான வரி என்றால் என்னவென்று கூட எனக்குத் தெரியாது ’ எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தீர்க்க சப்ரா தற்போது சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தனது ஆட்சேபனைகளுட கூடிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சப்ராவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.