
சண்டிகர் யூனியன் பிரதேசம், செக்டார் 25 பகுதியில் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன்பு, இசை நிகழ்ச்சி ஒன்று மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆதித்யா தாக்கூர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதே நேரத்தில், மாணவர் ஆதித்யா தாக்கூரை கத்தியால் குத்தியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இரு குழுக்களிடையே மீண்டும் வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது. ஆண்கள் விடுதியில் நடந்ததாகக் கூறப்படும், இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டனர். அதன் பிறகு, அவர்களை போலீசார் அங்கிருந்து கலைத்து அப்புறப்படுத்தினர். பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் சிலர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சண்டிகர் போலீசார், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் விடுதி வார்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றன.