Skip to main content

மலேசியாவில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

இந்தியா, மலேசியா நாடுகள் பங்குபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நட்புறவு அமர்வு வாலிபால் போட்டி மலேசியாவில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

 

disabilities persons achieved in Malaysia

 

இந்தியா, மலேசியா இரு நாடுகள் பங்குபெற்ற இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நட்புறவு அமர்வு வாலிபால் போட்டியானது மலேசிய நாட்டை சார்ந்த  அமர்வு வாலிபால் கழகம் நடத்தியது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட ஆண்கள் அணியும், 12 பேர் கொண்ட பெண்கள் அணியும் என விளையாட்டு வீரர்களை இந்திய அமர்வு வாலிபால் கழகம் அழைத்துச் சென்றது. அங்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா, மலேசியா அணிகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் விதத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி, மலேசியா அணியோடு விளையாடியதோடு  மலேசியா விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பயன்படுத்தக்கூடிய உத்திகளை தெரிந்து கொண்டார்கள். மேலும் மலேசியா நாட்டில் உள்ள விளையாட்டு அரங்கங்களை, விளையாட்டு உபகரணங்களையும் எவ்வாறு விளையாடுவது என்ற நுணுக்கங்களையும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டார்கள். 
 

இந்திய அணியில் 12 வீரர்கள் ஆண்கள் அணியிலும், 12 வீரர்கள் பெண்கள் அணியிலும் பங்கு பெற்ற தருணத்தில் ஆண்கள் அணியில் மட்டும் 12 பேரில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களில் 2 பேர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பச்சமுத்து மற்றும் மோகன் ஆகியோர் இந்திய அணிக்காக பங்கு பெற்றார்கள். அவர்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரை தமிழ்நாடு அமர்வு வாலிபால் கழகத்தின் தலைவர் டாக்டர் ராஜனுடன்  சென்று வாழ்த்து பெற்றார்கள். அவர்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் இவ்விளையாட்டு வீரர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும்  செய்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.  இது பற்றி ராஜன் கூறுகையில் "இவ்விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மிகவும் வசதி குறைவான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு தன்னார்வு அமைப்புகள் முன்வந்து சில நபர்களுக்கு உதவி செய்தார்கள். பல விளையாட்டு வீரர்கள் கடன் வாங்கி இந்த போட்டிகளுக்கு சென்று விளையாடி வந்தார்கள். ஈரோடை சேர்ந்த இந்த இரண்டு வீரர்களுக்கும் ஈரோடு அமைப்பினர் விமான கட்டணத்தை கொடுத்து உதவி செய்தார்கள். மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். பாரா ஒலிம்பிக் இடம் பெற்றிருக்கக் கூடிய அமர்வு வாலிபால் அணிகளுக்கு அதிகமான உதவியை தமிழக அரசு செய்தால் கட்டாயம் வரக்கூடிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் நாங்கள் வாங்கிக் கொடுப்போம் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். அதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கு உண்டான பயணப்படி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றை தமிழக அரசு செய்து கொடுத்தால் நிச்சயம் மாற்றுத்திறனாளிகள் அத்தனை பேரும் மாற்றத்தினை செய்யக்கூடிய திறனாளிகளாக மாறுவார்கள். அது தமிழக அரசின் கையில்தான் உள்ளது" என்று தமிழ்நாடு சிட்டிங் வாலிபால் கழகத்தின் தலைவர் ராஜன் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்