இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற பெண்ணுக்கு, சகோதரரை இழந்தவர் மன்னிப்பு வழங்கி ஆரத்தழுவி ஆறுதல் கூறும் புகைப்படம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் ஆம்பர் கைகெர் (வயது 31) என்ற பெண் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி, தனது வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பின வாலிபரான போதம் ஜீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். வெள்ளையின பெண்ணான இவர் கருப்பினத்தவரை கொன்றது நிறவெறி தாக்குதல் என கூறி அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. ஆனால் அதனை மறுத்த ஆம்பர் கைகெர், தனது வீட்டில் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக தவறாக நினைத்து போதம் ஜீனை, தற்காப்புக்காக சுட்டதாக கூறினார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டாமி கெம்ப், சில நாட்களுக்கு முன் தனது இறுதி தீர்ப்பினை வழங்கினார். அதன்படி, ஆம்பர் கைகெருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடபட்டது. அப்போது நீதிமன்ற வளாகத்தில் தனது தவறுக்காக வருந்தி அழுத ஆம்பரை, போதம் ஜீனின் சகோதரர் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.
அப்போது போதம் ஜெனின் சகோதரர், ஆம்பரிடம், "நான் உங்களை மன்னித்துவிட்டேன். கடவுளும் உங்களை மன்னிப்பார். மற்றவர்களை போலவே உங்களையும் நான் நேசிக்கிறேன்" என தெரிவித்தார். இதனை கேட்டு கண்ணீர் சிந்தியபடியே ஆம்பர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார். நீதிமன்றத்தில் அனைவரையும் நெகிழ வைத்த இந்த சம்பவத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ உலகம் முழுவதும் பலரையும் உருக வைத்துள்ளது.