ஸ்பெயின் நாட்டில் கடற்கரை அருகில் உள்ள கேட்டலோனியா நகரம் இடுப்பளவு நுரையில் தத்தளிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கடந்த மூன்று நாட்களாக பனியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகின்றது. கடலோரப் பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசுவதால் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.
இந்நிலையில் ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள டாசா மார் நகரில் வீசிய சூறைக்காற்றினால் கடற்கரை ஒட்டிய நகரங்களில் உள்ள வீடுகள் 4 அடிக்கும் மேலாக நுரையால் சூழப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த மாதிரியான சுற்றுசூழல் மாற்றங்கள் ஏற்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த நுரை பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், காற்றில் கலந்தால் அதனை சுவாசிக்கும் போது எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக அந்நாட்டில் சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.