கரோனா தொற்று குறைந்துவரும் நாடுகள் கவனமுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ள கரோனா வைரஸ், பொதுமக்களிடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலக அளவில் 6.19 கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆரம்பத்தில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய சில நாடுகளில் சிறிது காலத்தில் இதன் தொற்று குறைந்தது. இதனைத்தொடர்ந்து அந்நாடுகளில் இயல்புநிலை மெல்லத் திரும்புவதாக நினைக்கப்பட்டபோது, வைரஸின் இரண்டாவது அலை மீண்டும் பரவ ஆரம்பித்தது. தற்போதைய சூழலில், பல ஐரோப்பிய நாடுகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று குறைந்துவரும் நாடுகள் கவனமுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "கரோனா தொற்று குறைந்துவரும் நாடுகள் கவனமுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக்கூடாது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் தான் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.