ஒருவர் பேசும்போது அவரது வாயிலிருந்து வெளிவரும் நுண்ணிய எச்சில் துளிகள் வழியே கரோனா பரவும் என புதிய ஆராய்ச்சி ஒன்று எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய நீரிழிவு, செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மூடப்பட்ட இடத்தில் சில நபர்களை “ஆரோக்கியமாக இருங்கள்” என்ற வாக்கியத்தை 25 வினாடிகள் சத்தமாகக் கூற வைத்துள்ளனர். அப்போது அவர்களின் எதிரே ஒரு சென்சார் ஒன்றைப் பொருத்திப் பேசுதல் மூலம் கரோனா பரவுவதன் சாத்தியக்கூறுகளை அந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபரும் பேசும்போதும், அருகிலிருந்த சென்சார் உதவியுடன் அவர்கள் வாயிலிருந்து வரும் நுண்ணிய, கண்ணுக்குத் தெரியாத எச்சில் துளிகளில் உள்ள வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், ஒரு நபர் பேசும் போது உருவாகும் நுண்ணிய நீர்த்துளிகள் சுமார் 12 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு மூடப்பட்ட இடத்தில் காற்றில் தங்கி இருப்பதாகவும், அந்த ஒவ்வொரு துளியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
சாதாரண சூழ்நிலையில், இந்த நீர்த்துளிகள் எட்டு நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மூடிய இடத்தில் காற்றில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். மேலும் இவை வரையறுக்கப்பட்ட இடங்களில் நோயைப் பரப்பும் திறனைக் கொண்டுள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.