அரண்மனையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியா மன்னரும், ராணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ள கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மலேசிய அரண்மனையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு மன்னரும், ராணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , “அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு கோவிட் தொற்று ஏற்பட்டது என மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதனையடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்கள் இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியாவில் இதுவரை 2031 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.