ஜப்பான் நாட்டின் சர்ச்சை மிகுந்த தைஜி டால்பின் வேட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.
திமிங்கல வேட்டை மற்றும் டால்பின் வேட்டைகளால் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது ஜப்பான் நாடு. இருப்பினும் இவை இரண்டு தொடர்ந்து அந்த நாட்டில் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு தடை விதித்தது ஜப்பான் அரசு. இருப்பினும் உள்ளூர் மீனவர்கள் உணவுக்காக அதனை விற்பதற்காக தொடர்ந்து வேட்டையாடிய வந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு முதல் மீண்டு வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு ஜப்பான் அரசு அனுமதியளித்தது.
இந்த நிலையில் தற்போது டால்பின் வேட்டையும் அங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தைஜி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை டால்பின் வேட்டை தொடங்கியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த வேட்டையாடுதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேட்டையாடுதலின் போது அங்குள்ள மீனவர்கள் கடலுக்குள் சென்று அங்கிருக்கும் டால்பின்கள் மற்றும் சிறிய திமிங்கலங்களை துரத்தி ஒரு நீர் நிரம்பிய குகைப்பகுதிக்கு கொண்டு வருவர். அவை அங்கு வந்தவுடன் குகையை சுற்றி வலைகள் வீசப்பட்டு அவை சிறைபிடிக்கப்படும். பின்னர் அந்த டால்பின்களை பார்த்து எதனை மாமிசத்திற்கு விற்க வேண்டும், எதனை மீன் காட்சியகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்வர்.
அதில் மீன் காட்சியகத்துக்கு அனுப்பப்பட வேண்டிய மீன்கள் உயிருடன் பத்திரமாக தனியாக பிடிக்கப்படும். உணவிற்காக ஒதுக்கப்பட்ட டால்பின்கள் கொடூரமாக வேட்டையாடப்படும். தண்ணீரில் அந்த டால்பின்கள் தப்பிக்க முயலும் போது அந்த டால்பின்களின் முதுகெலும்பு பகுதிகளில் கூர்மையான கம்பிகளை கொண்டு குத்தப்படும். இதனால் உடனே உயிரிழக்க முடியாத நிலையில் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் வெளியேறி கொடூரமாக இறக்கும்.
இதனால் அப்பகுதியில் உள்ள நீர் முழுவதுமே ரத்த நிறத்தில் மாறிப்போகும். உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையிலும் ஜப்பானில் இது ஆண்டுதோறும் நடந்தே வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் தங்கள் பாரம்பரியம் என கூறினாலும். அதற்காக டால்பின்கள் கொல்லப்படுவது பலரையும் எதிர்ப்புக்குரல் எழுப்ப வைத்துள்ளது.