டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே நேற்று (26-12-23) மாலை 05:10 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக டெல்லி போலீசாருக்கு தொலைபேசி வழியாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புகாரையடுத்து போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அதே சமயம் இஸ்ரேல் தூதரகம், அப்பகுதியில் உள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு், டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என இந்தியா செல்ல இருக்கும் இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரெஸ்டாரண்ட், ஹோட்டல் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என வெளிப்படுத்தும் அடையாளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே வெடிச்சத்தம் கேட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.