உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா 100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை சீனா வெளியிடவில்லை. பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை கொண்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இருப்பினும் மற்ற பெரிய நாடுகளை விட தாமதமாகத் தடுப்பூசி செலுத்துவதை தொடங்கிய சீனா, அதற்குள் 100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தியிருப்பது ஆச்சரியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
சீனாவிடம் தற்போது 4 அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன. அதில் இரண்டு தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனது மக்கள்தொகையில் 40 சதவீத மக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் சில மாகாணங்கள் தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகின்றன. மத்திய அன்ஹுய் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு இலவச முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பீஜிங்கில் சில பகுதிகளில் இலவச ஷாப்பிங் கூப்பன்களும் வழங்கப்பட்டு வருகிறது.