தற்போதைய எல்லைப்பிரச்சனைக்கு பொறுப்பு இந்தியா மட்டுமே என்ற கருத்தில் விடாப்பிடியாக இருந்துவருகிறது சீனா.
லடாக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்துவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வே ஃபெங் ஆகியோர் சந்தித்து இருநாட்டு அமைதி குறித்து ஆலோசனை நடத்தினர். ஒருபுறம் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், மறுபுறம் எல்லைப்பிரச்சனைக்கான பழியை இந்தியா மீது போட்டுள்ளது சீனா.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது நிலவும் எல்லை பிரச்சனைக்கான காரணம் மற்றும் உண்மைகள் தெளிவாக உள்ளன. இதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவிடமே உள்ளன. தனது பிராந்தியத்தின் ஓர் அங்குல நிலத்தைக் கூட சீனாவால் இழக்க முடியாது. தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் காக்க சீன படைகள் உறுதியாகவும், திறன் வாய்ந்தவையாகவும், நம்பிக்கை மிக்கவையாகவும் உள்ளன," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.