கரோனா பரவலைக் கையாண்ட விதத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்களுக்கு மறக்க முடியாத காயத்தையும், நோயையும் வழங்கியுள்ளார் என ஒபாமா விமர்சித்துள்ளார்.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 80,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் அந்நாட்டில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகக் குளறுபடிகளே என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மேலும், கரோனா வைரஸி்ன் தீவிரம் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மருத்துவ உளவுத்துறை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலரும் அதிபர் ட்ரம்ப்புக்கு முன்கூட்டியே பலமுறை எச்சரித்தும் அவர் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டதே இவ்வளவு பெரிய பாதிப்புக்குக் காரணம் எனவும் அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கரோனா பரவலைக் கையாண்ட விதத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்களுக்கு மறக்க முடியாத காயத்தையும், நோயையும் வழங்கியுள்ளார் என ஒபாமா விமர்சித்துள்ளார்.
ஒபாமா, தன்னுடன் பணியாற்றிய ஊழியர்கள் அமைப்புடன் நேற்று காணொளிக்காட்சி மூலமாக உரையாடினார். அப்போது பேசிய அவர், "அமெரிக்காவில் பரவிய கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அதிபர் ட்ரம்ப்புக்குத் தெரியவில்லை. அதை எவ்வாறு சரியாகக் கையாளுவது எனத் தெரியாமல், அனைவருக்கும் மறக்க முடியாத காயத்தையும், நோயையும் வழங்கியுள்ளார். கரோனா வைரஸைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் கையாண்ட குழப்பமான முறைகள் முழுமையான பேரழிவில் முடிந்துள்ளது. இந்தப் பெருந்தொற்றைச் சமாளிக்க அமெரிக்காவுக்கு வலிமையான தலைமை தேவை.
தொடக்கத்திலிருந்தே கரோனா வைரஸ் குறித்த புரிதல் இல்லாமல் அதிபர் ட்ரம்ப் பேசி வந்தார். கரோனா வைரஸ் சாதாரண நோய் என்றார், பின்னர் அது விரைவில் ஒழிந்துவிடும் என்றார். ஆனால் ட்ரம்ப் மார்ச் மாத நடுப்பகுதியில்தான் கரோனா தீவிரத்தின் உண்மையை உணர்ந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.