தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராக தமிழர்கள் வாழும் சர்வதேச நாடுகளிலும் கண்டனக் குரல்கள் எதிரொலிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் நடந்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம் ஐ.நா.வின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில் நடந்தது.
நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையினால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 வரையிலும் நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீறல்கள் என பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனிற்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அதனை அனைவரும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர், சுவீடன்-இந்திய வணிக அவை, சர்வதேச ஆம்னெஸ்டி அமைப்பு, சர்வதேச க்ரீன் பீஸ், ஐரோப்பிய-, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக் கூட்டமைப்பு, வால்வோ, ஏபிபி, எஸ்கேஎஃப் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பி வைப்பதற்கான முன் முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.
அந்த மனுவில்,
1. மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில், தொடங்க வேண்டும்.
2. ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.
3. தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும்.
4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது.
5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும்.
7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும்.
8) மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும்.
- உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.